Print this page

விருதுநகர் மகாநாடு. குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.07.1931 

Rate this item
(0 votes)

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு விருதுநகரில் ஆகஸ்டு மாதம் 8,9 தேதிகளில் திருவாளர் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடத்த தீர்மானமாகி எல்லா ஏற்பாடுகளும் வெகு மும்மரமாய் நடைபெற்று வருவதை வாசகர்கள் பத்திரிகைகளின் மூலம் அறிந்திருக்கலாம். இம் மகாநாடு இதற்கு முன் இரண்டு தடவை தேதிகள் குறிப்பிடப்பட்டு எதிர் பாராத சம்பவங்களால் தடைப்படுத்தப்பட்டு விட்டது. 

ஆனாலும், இப்போது முன் நடத்தப்பட்டிருந்தால் எவ்வளவு விசேஷமாய் நடைபெற்றிருக்குமோ அதை விட பன்மடங்கு விசேஷமாக நடந்தேர காரியங்கள் நடந்து வருவதானது தலைவர் திருவாளர் சௌந்தர பாண்டியன் அவர்கள் தீவிர முயற்சி எடுத்து சுற்றுப்பிரயாணம் முதலிய வைகள் செய்து வருகின்றதைப் பார்த்தாலே விளங்கும். கால நிலைமையும் முன்னைவிட இப்போது சற்று திருப்திகரமாகவே காணப்படுவது மற்றொரு விசேஷமாகும். 

அதாவது வெய்யில் கொடுமை தணிந்திருப்பது ஒன்று. தண்ணீர் சௌகரியத்திற்கு சற்று அனுகூலமேற்பட்டிருப்பது மற்றொன்று. இவ் விரண்டையும் விட சுயராஜ்ஜியம் என்னும் அரசியல் கிளர்ச்சி என் பதின் இரகசியம் பம்பாய் காரியக்கமிட்டியின் தீர்மானத்தால் ஒரு வகையில் வெளியானதின் பயனாய் சுயமரியாதை இயக்கத்தின் அவசியத்தை, அதை குற்றம் சொல்லிக்கொண்டு இருந்த மக்கள் முதல் யாவரும் அறிய நேர்ந்தது மூன்றாவதாகும். இப்படியாக இன்னும் பல நன்மைகள் ஏற்பட்டது முக்கிய அனுகூலங்களாகும். 

இந்த மகாநாடானது முன்னைய இரண்டு மகாநாடுகளை விட சற்று முக்கியமானதென்றே சொல்லுவோம். சுருக்கமாய்ச் சொல்லுவதானால் இம் மகாநாட்டில் இயக்கத்தின் முற்போக்கை ஒரு விதம் நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கும். வரவேற்புக் கமிட்டியார் அறிக்கைகளிலிருந்து ஏராளமான பிரதி நிதிகள் வருவதாய் தெரிவித்துக் கொண்டிருக்கின்றதாய் தெரியவருகின்ற தானாலும் எல்லாப் பாகங்களில் இருந்தும் வாலிபர்கள் தாராளமாய் வந்து சேரவேண்டுமென்று தெரிவித்துக் கொள்கின்றோம். 

 மற்றும் மகாநாட்டிற்கு விஜயமாகும் பிரதிநிதிகள் அவசியம் தங்கள் தங்கள் வீட்டு பெண் மக்களையும் அழைத்து வரவேண்டியது மிகவும் அவசியமென வேண்டிக் கொள்ளுகின்றோம். பெண்கள் வருவதன் மூலமும், அவர்கள் உணர்ச்சி பெருவதன் மூலமும் தான் நமது கொள்கைகள் வீரிட்டெழ முடியுமேயொழிய ஆண்களின் வீர உரைகளால் மாத்திரம்' காரியங்கள் சாத்தியமாகி விடாது. 

ஆதலால் பெண்மணிகளும் தாராளமாய் விஜயம் செய்ய வேண்டு மென்று ஆசைப்படுகின்றோம். பெண்மக்களுக்கு சாப்பாடும், பிரவேசமும் இலவசமென்று வரவேற்புக் கமிட்டியார் தீர்மானித்திருப்பது போற்றக் கூடியதாகும். பெண்கள் மகாநாட்டுக்கு திருமதி இந்திராணி பாலசுப்பிர மணியம் அம்மாள் அவர்களும், வாலிபர்கள் மகாநாட்டிற்கு திரு. நாராயணப் பெருமாள் M.L.C. (திருவனந்தபுரம்) அவர்களும் தலைமை வகிப்பார்கள். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.07.1931

Read 75 times